கிளிநொச்சிஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

சினிமா பாணியில் பல கிலோமீட்டர் துரத்தல்: சட்டவிரோத மரப்பலகைகளுடன் கப் வாகனம் கிளிநொச்சியில் சிக்கியது

Desktop Image Mobile Image

கிளிநொச்சி மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, கிளிநொச்சி பொலிஸார் நீண்ட தூரம் துரத்திச் சென்று கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், அவருடன் பயணித்த உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் தெரிவித்த தகவலின்படி, மாங்குளத்திலிருந்து ஏ9 பிரதான வீதியூடாக பயணித்த கப் வாகனம், பொலிஸ் சோதனையைத் தவிர்க்கும் நோக்கில் இரணைமடு சந்தியிலிருந்து திருவையாறு உள்வீதிக்குள் நுழைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் உத்தரவை மீறி தப்பிச் சென்ற சாரதி

அந்த நேரத்தில் திருவையாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொலிஸார் வீதித் தடையை அமைத்து வாகனங்களைச் சோதனை செய்து வந்தனர். சந்தேகத்திற்கிடமான கப் வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டியபோதும், சாரதி அதனைப் புறக்கணித்து அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தி தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து, மோட்டார் சைக்கிள்களில் விரைந்த கிளிநொச்சி பொலிஸார் உடனடியாக வாகனத்தைத் தொடர்ந்து துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பல பகுதிகள் ஊடாக ஆபத்தான பயணம்

தப்பிச் செல்ல முயன்ற சாரதி திருவையாறு, இரத்தினபுரம், டிப்போ சந்தி, கனகபுரம், உதயநகர், விவேகானந்தா வீதி மற்றும் பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக மீண்டும் ஏ9 வீதியை அடைந்து, 155ஆம் கட்டைப் பகுதி வரை ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

எனினும், 155ஆம் கட்டைப் பகுதியை அண்மித்தபோது வாகனத்தின் சக்கர ஆணிகள் உடைந்ததால் அது தொடர்ந்து பயணிக்க முடியாமல் நின்றுள்ளது.

உதவியாளர் கைது – சாரதிக்காக தீவிர தேடுதல்

வாகனம் நின்றவுடன் சாரதி அங்கிருந்து தப்பியோடிய நிலையில், வாகனத்தில் இருந்த அவரது உதவியாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கப் ரக வாகனத்துடன், அதில் ஏற்றிச் செல்லப்பட்டிருந்த பெருமளவிலான சட்டவிரோத முதிரை மரப்பலகைகளும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, தப்பியோடிய சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளும் தேடுதல் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button