
கொழும்பில் இன்று (29) இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸாரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி, நாவல வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் வீதித் தடையை மீறிச் செல்ல முயன்ற வாகனம் ஒன்றை நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும், வாகனம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து சென்றதையடுத்து, பொலிஸார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் வாகனத்தை சம்பவ இடத்திலேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, வாகனத்துக்குள் இருந்த 26 வயதான இளம் பெண் மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு இன்று பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த வாகனத்தை வீதித் தடையில் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
எனினும், வாகனம் நிறுத்தப்படாமல் சென்றதால் அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், மீட்கப்பட்ட பெண் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் வாகனத்தை கைவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



