
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (16) சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் எதிர்வரும் பட்ஜெட் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள புதிய அறிவிப்புகள், தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அமைச்சர்கள் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது, ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது.
“ஊழல், லஞ்சம், முறைகேடு போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது எந்தவித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் என்றாலும் பதவி பறிக்கப்படும். அரசின் நிர்வாகம் வெளிப்படையாகவும் ஊழலற்றதாகவும் இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தேவையற்ற விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மக்கள் நலப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் அவர் அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.




