கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பரபரப்பு: அர்ச்சுனா எம்.பி வெளியேற்றம்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று (16) ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் கூட்ட அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திருவையாறு பகுதியில் லால் காந்தா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தென்னைச் செடிகள் விநியோகத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் போது, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்பாகவும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அர்ச்சுனா எம்.பி இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், நிலைமை மேலும் பதற்றமடைந்ததைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு அர்ச்சுனா எம்.பியிடம் கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக பொலிஸார் அவரை கூட்ட அரங்கிலிருந்து வெளியே அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கூட்டத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறியதாகவும், இதன் காரணமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




