
அனுராதபுரம் கோரக்கஹாவேவ பகுதியில் அமைந்துள்ள வனக் காப்பகத்திற்குள் பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (28) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
கணவருடன் இருசக்கர வாகனத்தில் வனக் காப்பகப் பகுதிக்குச் சென்றிருந்த குறித்த பெண், அங்கு ஏற்பட்ட தனிப்பட்ட தகராறைத் தொடர்ந்து தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகராறு முற்றிய நிலையில் கணவர் கூர்மையான ஆயுதத்தால் மனைவியை தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆயுதத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மனைவியை தாக்கியதாக கூறப்படும் அதே ஆயுதத்தால் கணவரும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காயங்களுக்குள்ளான அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே சம்பவத்திற்கான காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.




