வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் தொடர்பான வழக்கு இன்று வவுனியா மேல்நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
முதல்வரின் பதவி நீக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடைக்கட்டளையை தொடர்ந்து நீடிப்பதா அல்லது அதனை நீக்குவதா என்பது தொடர்பில் கடந்த தவணையில் நீதிமன்றில் இருதரப்பினருக்கும் இடையே விரிவான விவாதம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், இருதரப்பு தரப்பினரும் தங்களது எழுத்துமூல சமர்ப்பணங்களை நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும் என முந்தைய தவணையில் உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த 28ஆம் திகதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
மனுதாரர் தரப்பினால் கோரப்பட்டிருந்தபடி எழுத்துமூல சமர்ப்பணங்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எனினும், எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, தமது தரப்பின் எழுத்துமூல சமர்ப்பணங்களை சமர்ப்பிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட வவுனியா மேல்நீதிமன்றம், எதிர்மனுதாரர் தரப்பிற்கு மேலும் இரண்டு வார கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
அதேவேளை, வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீதான இடைக்காலத் தடைக்கட்டளையை இம்மாதம் 23ஆம் திகதி வரை நீடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், மாநகர முதல்வரின் பதவி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் தற்போதைய இடைக்கால நிலைமை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடரவுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி இ. தயாபரன் இன்று வவுனியா மேல்நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்



