தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம்

நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
எனினும், முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன், கோஷங்களையும் எழுப்பினர்.
நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசியதாகவும், ஏற்கனவே பலமுறை சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கை தொடர்பாகவும் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகவும் திமுக உறுப்பினர் ஏ.வா. வேலு குற்றம்சாட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சபாநாயகர் இருக்கையைச் சுற்றி நின்று தொடர்ந்து முழக்கமிட்ட திமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவைக்காவலர்கள் திமுக உறுப்பினர்கள் சிலரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தால் தமிழக சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டது.




