
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பாரிய மோதல் கடுமையான வன்முறையாக தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (05) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கும், ஏற்கனவே தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், இன்று (06) மேலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சில கைதிகள் கண்டி, பல்லேகலையில் அமைந்துள்ள போகம்பர திறந்தவெளி சிறைச்சாலைக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களில் 7 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




